Tuesday, February 21, 2012

தூக்கம் விற்ற கனவுகள்


இருப்பவனுக்கோ வந்து விட ஆசை

வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!


விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகின்றது!


நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால் வாழ்க்கையில்...?


தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலே ...
இளமை கழிக்கின்றோம்!


எங்களின் நிலாக்கால
நினைவுகளையெல்லாம்...
ஒரு விமானப்பயனத்தூனூடே
விற்றுவிட்டு


கனவுகள்
புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்!


மர உச்சியில் நின்று
ஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!
வாரவிடுமுறையில்தான்..
பார்க்கமுடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!


அம்மாவின் ஸ்பரிசம்
தொட்டு எழுந்த நாட்கள்
கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!


பழகிய வீதிகள்பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவு
நேர கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!


நண்பர்களோடு ஆற்றில்
விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்
நோன்புநேரத்துக் கஞ்சி



கிட்டிப்புல் கரம் கபடி சீட்டு என
சீசன் விளையாட்டுக்கள்!


ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த உள்ளுர்
உலகக்கோப்பை கிரிக்கெட்!


இவைகளை
நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
விசாவும் பாஸ்போட்டும் வந்து...
விழிகளை நனைத்து விடுகிறது.!


வீதிகளில் ஒன்றாய்
வளர்ந்;த நண்பர்களின் திருமணத்தில்!
திராஒளன் அடித்து
மாப்பிள்ளை அலங்காரம்!


கூடிநின்று கிண்டலடித்தல்!
கல்யாணநேரத்து பரபரப்பு!


பழையசடங்குகள்
மறுத்துப்போராட்டம்!
பெண்வீட்டார் மதிக்கவில்லை
எனகூறி வறட்டு பிடிவாதங்கள்!


சாப்பாடு பரிமாறும் நேரம்...
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!


இவையெதுவுமே கிடைக்காமல்
கண்டிப்பாய் வரவேண்டும்
என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக
சங்கடத்தோடு...!


ஒரு
தொலைபேசி வாழ்த்தூனூடே...
தொலைந்துவிடுகின்றது
எங்களின் நீ...ண்ட நட்பு!


எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து
ஏழைகள்தான்!


காற்றிலும் கடிதத்திலும்
வருகின்ற சொந்தங்களின்...
நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்


அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!


ஆம்
இதயம் தாண்டி
பழகியவர்களெல்லாம்...
ஒரு கடலைத்தாண்டிய
கண்ணீரிலையே...
கரைந்துவிடுகிறார்கள்!




இறுதிநாள் நம்மிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!


இருப்பையும் இழப்பையும்
கணக்கிட்டுப்பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...


பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு...
முதல் பார்வை... முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை
றியாழும் தினாரும்
தந்துவிடுமா?


கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!


கிள்ளாமலையே
நாங்கள் அழும் சப்தம்
யாருக்கு கேட்குமோ?

ஓவ்வொறு முறை ஊருக்கு
வரும்பொழுதும்...
பெற்றகுழந்தையின்
வித்தியாசப்பார்வை...
நெருங்கியவர்களின்... திடீர்மறைவு


இப்படி
புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு...
மீண்டும்


அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்...


தங்கையின் திருமணமும்...
வீட்டு கஸ்டங்களும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு

Thursday, January 19, 2012

கூகுள் பிளசில் போட்டோக்கள் மீது தமிழில் எழுதும் வசதி- Add Text on Photos

மிகவேகமாக வளர்ந்து வரும் சமூக இணையதளமான கூகுள் பிளசில் ஒரு புதிய வசதியை வெளியிட்டு உள்ளனர்(நேற்று ஆணி அதிகம் இணையம் பக்கமே வர முடியல இதனால் இன்று எழுதுகிறேன்).  அந்த வசதியின் படி கூகுள் பிளசில் போட்டோக்கள் பகிரும் பொழுது அந்த போட்டோக்களில் நாம் விரும்பியதை எழுதலாம். தமிழ் மொழியையும் சப்போர்ட் செய்வது இதன் கூடுதல் சிறப்பாகும். எனக்கு தெரிந்து எந்த சமூக தளத்திலும் இந்த வசதி இல்லை என நினைக்கிறேன். நாம் எழுதும் வாக்கியம் போட்டோக்கள் அளவிற்கு ஏற்ப எழுத்துக்களின் அளவு தானாகவே குறைந்து விடுகிறது.


கூகுள் பிளசில் எப்பொழுதும் போட்டோக்கள் பகிர்வது போல Add Photo கிளிக் செய்து புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். Add Text என்ற ஒரு புதிய வசதி இருக்கும் அதன் மீது கிளிக் செய்யுங்கள்.


அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். அதில் Top, middle, Bottom என மூன்று கட்டங்கள் இருக்கும் எந்த இடத்தில் வாக்கியம் சேர்க்க வேண்டுமோ அந்த கட்டத்தில் உங்களின் வாக்கியத்தை டைப் செய்யவும். கூகுளின் IME பயன்படுத்தி நேரடியாக தமிழில் டைப் செய்யலாம்.

வலது புறத்தில் உள்ள T என்ற லிங்கை கிளிக் செய்து வேண்டிய Font Family தேர்வு செய்து கொள்ளவும். உங்கள் வார்த்தையை கொடுத்தவுடன் கீழே உள்ள Save பட்டனை அழுத்தி வரும் விண்டோவில் Share செய்து விடலாம்.

போட்டோவில் தமிழில் வாட்டர்மார்க் சேர்க்க விரும்புவோருக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். வாட்டர் மார்க் சேர்த்த பின் வேண்டுமென்றால் உங்கள் கணினியில் சேமித்து மற்ற இடங்களில் பகிர்ந்து கொள்ளலாம். 

Sunday, January 15, 2012

விண்டோஸ் கணினிகளில் System Restore Point உருவாக்குவது எப்படி(XP, Windows7)



விண்டோஸ் கணினிகளில் system Restore Point என்ற வசதி உள்ளது. System Restore Point வசதி என்பது உங்கள் கணினிகளில் ஏதேனும் சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்வதற்கு முன்னோ, Registry சுத்தம் செய்யும் பொழுதோ ஏதோ அசம்பாவிதம் ஏற்ப்பட்டு உங்களில் கணினியில் ஏதேனும் முக்கிய மென்பொருள் கிராஷ் ஆகிவிட்டால் System Restore Point வசதி மூலம் மீண்டும் பழைய நிலைக்கு உங்கள் கணினியை கொண்டு வரலாம். ஆனால் இந்த செயல்களை செய்வதற்கு முன் நீங்கள் System Restore Point உருவாக்கி வைத்திருக்க வேண்டும். சுருக்கமாக சொல்ல போனால் System Restore Point உங்கள் கணினி செட்டிங்க்சை பேக்கப் எடுத்து வைப்பது என கூறலாம்.



Windows7 கணினிகளில் System Restore Point உருவாக்க:
  • முதலில் உங்கள் My computer ஐகான் மீது ரைட் கிளிக் செய்து Properties தேர்வு செய்யவும்.
  • அடுத்து System Production என்பதை கிளிக் செய்யவும்.
  • அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். அதில் Create என்பதை அழுத்தவும்.
  • அடுத்து வரும் விண்டோவில் Description கொடுக்கவும். இன்ஸ்டால் செய்ய போகும் மென்பொருளை பற்றி இருந்தால் ஞாபகம் வைத்து கொள்ள சுலபமாக இருக்கும்.
  • அடுத்து உங்கள் கணினியின் Restore Point உருவாக்கப்படும். 
அவ்வளவு தான் உங்களுடைய System Restore Point உருவாக்கப்பட்டுவிட்டது. இனி நீங்கள் தைரியமாக மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். 
XP கணினிகளில் System Restore Point உருவாக்க:

  • Start - All Programs - Accessories - System Tools சென்று System Restore என்பதை கிளிக் செய்யவும்.
  • அடுத்து Create a System Restore Point என்பதை தேர்வு செய்யவும்.
  • அடுத்து Description கொடுக்கவும்.

  • அடுத்து Create பட்டனை கிளிக் செய்யவும். 

அவ்வளவு தான் Restore Point உருவாகி விடும். 

இனி உங்கள் கணினியில் ஏதேனும் பிரச்சினை என்றால் நீங்கள் உருவாக்கியுள்ள Restore my computer to an earlier time என்பதை கிளிக் செய்து கணினியை திரும்பவும் பழைய நிலைக்கு கொண்டுவரலாம்.